சென்னை: சென்னையில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நள்ளிரவு 12.20 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 148 பயணிகள் 12 விமான ஊழியர்கள் உட்பட 160 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில், விமானம் வானில் பறக்கத் தொடங்கினால், பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை இயக்க வேண்டாம் என்று விமானிக்கு அறிவுறுத்தினர். அதோடு ஓடுபாதையில் நின்றிருந்த விமானம் இழுவை வண்டி மூலம் இழுத்துக் கொண்டு வரப்பட்டு அது புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தைப் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், அதிகாலை வரையில் விமானத்தின் இயந்திரங்கள் சீர் செய்ய முடியவில்லை. இதை அடுத்து பயணிகள் 148 பேரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். விமானம் தாமதமாக இன்று (ஜனவரி 18) மதியத்திற்கு மேல் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசுப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மலேசியா போக வேண்டிய 148 பயணிகள் சென்னையில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு இடையே, விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாற்றை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு 148 பயணிகள் 12 விமான ஊழியர்கள் என 160 பேர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் இயந்திரக் கோளாறு காரணமாகப் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சுடர் ஓட்டம்.. உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!