சென்னை:மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ''முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த கல்லூரி என்பதை விட எம்ஐடி-க்கு வேறு பெருமை தேவை இல்லை. மேலும் நாட்டின் முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மற்றும் கல்விக் கண் திறந்த பெருமைக்குரிய காமராஜர் உள்ளிட்டப் பல தலைவர்கள் எம்ஐடி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்த கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதை நினைத்துப் பெருமை கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ''தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாகவும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதன்மைபெற்ற மாநிலமாகவும் திகழ்கிறது. வாரிசுகளால் எம்ஐடி கல்வி நிறுவனம் வளர்ந்து இருக்கிறது, வாரிசுகளால் ஏராளமான தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியைப் பெற்றுள்ளனர். தான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறை மட்டுமல்ல பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும் என்பதற்கு எம்ஐடி கல்வி நிறுவனம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது'' எனவும் அவர் குறிப்பிட்டார்.