கரோனா வைரஸ் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் சமூக விலகல் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடுவதை தவிர்த்திடவும், அரசின் ஊரடங்கு உத்திரவை பின்பற்றிடும் வகையில் அனைத்து வகையான மீன்பிடி படகுகளின் மீன்பிடித் தொழில் மற்றும் மீன்பிடிப்பு சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இயன்றவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, குறைந்த அளவிலான மீனவர்களைக் கொண்டு மீன்பிடிப்பு மேற்கொள்ளவும், கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கூடாதவண்ணம், மீன்கள் ஏலம் விடுதலை தவிர்த்திடவும், சுழற்ச்சி முறையில் மீனவ கிராமங்களை மீன்பிடித்திட அனுமதிக்குமாறும் மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தற்போது மீனவர்களுக்கான செய்திக்குறிப்பு ஒன்றை அரசு வெயியிட்டுள்ளது. அதில், "மீன்பிடித்தலின் போது சமுதாய விலகல் மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள “பிரச்னைகளை தீர்க்கும் குழு” மூலம் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு முறைகளை வரைமுறைப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசைப்படகுகளுக்கு, தற்போதைய ஊரடங்கு காலம் மீன்பிடி தடைகாலமாக கருதப்பட்டு அனைத்து மீன்பிடி விசைப்படகுகளும் மீன்பிடிப்பில் ஈடுபடாது. நாட்டுப் படகுகள், 10 எச்.பிக்கு மிகாத வண்ணம் உட்பொருத்தும் மற்றும் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் மட்டுமே தினசரி மீன்பிடிப்பிற்கு அனுமதிக்கப்படும்.
பெரிய மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் குறிப்பிட்ட நாளில் 300க்கும் அதிகமான படகுளை மீன்பிடிக்க அனுமதியில்லை. கிராம குழுக்கள், வியாபாரிகளிடமிருந்து விலைப்புள்ளிகள் பெற்று வியாபாரிகளிடம் நேரடியாக மீன்களை விற்பனை செய்ய வேண்டும். மீன்கள், அருகிலுள்ள சந்தைகள், கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு உரிய அடையாள அட்டைகளுடன் கொண்டுச் செல்லப்படும். மீன்பிடித்துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் சில்லரை விற்பனை மேற்கொள்ளப்படமாட்டாது. மீன்களை இறக்குதல், சந்தைக்கு கொண்டுச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு குறைந்த அளவிலான தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரம்!