சென்னை, பல்லாவரம் அடுத்த திருநீர்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சேசு ராஜ் (எ) ரயிலு (37). இவர் பிரபல கஞ்சா வியாபாரி. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனைசெய்த வழக்கில் பலமுறை சிறைக்குச் சென்றுவந்தவர். எங்கும் கஞ்சா கிடைக்கவில்லை என்றாலும் இவரிடம் மட்டும் எப்போதும் கஞ்சாவுக்குப் பஞ்சமிருக்காது. அதனால் கஞ்சா பிரியர்களின் முதல் தேர்வு ரயிலுதான்.
ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததிலிருந்தே ரயிலுவால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை. இதனால் கஞ்சாவை வாங்கி விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இவரிடம் வழக்கமாகக் கஞ்சா வாங்குபவர்கள் செல்போன் மூலம் தொடர்புகொண்டு கஞ்சா வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஆனால் இவரால் கஞ்சா கொடுக்க இயலவில்லை. கண நேரத்தில் சிந்தித்த ரயிலு தனது வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றெண்ணி, "நான் விரைவில் உங்கள் போதைக்காக கள்ளச்சாராயம் வேண்டுமென்றால் தருகின்றேன். ஆனால் ஒரு லிட்டர் சாராயம் இரண்டாயிரம் ரூபாய்" எனக் கூறியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், ரயிலுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சுமூக ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கள்ளச்சாராயத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தங்களுக்கு போதைதான் முக்கியம் என ரயிலுவின் வாடிக்கையாளர்கள் சொல்லிவிட்டனர்.
இதையடுத்து, ரயிலு கள்ளச்சாராயத்தை காய்ச்ச தொடங்கினார். அதன்படி, சுமார் பத்து நாள்களாக வீட்டின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டுள்ளனர்.