அடையாறு கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரகசிய விசாரணை சென்னை: சமூக வலைதளங்களில் அடையாறு கலாஷேத்ராவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் பேசிக்கொண்ட விவகாரம் வெளியானது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக தமிழக டிஜிபி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தது.
குறிப்பாக மாணவிகள் அடையாறு கலாஷேத்ரா நிர்வாகத்தில் புகார் அளித்தும், மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து விசாரிக்கும் குழு முறையாக விசாரிக்காமல், கலாஷேத்ரா பெயரைக் கெடுக்க இதுபோன்று பொய்யான புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக மறுத்துள்ளது.
இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம் கலாஷேத்ரா இயக்குனரையும், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரிடமும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு தெரிவித்திருந்தது. அவ்வாறு விசாரணை செய்யவில்லை என்றால் தேசிய மகளிர் ஆணையமே நேரடியாக விசாரணையில் இறங்கும் எனவும் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் அடையாறு கலாஷேத்ராவை சேர்ந்த மாணவி ஒருவர் தன் பெயரை பயன்படுத்தி பொய்யாக பாலியல் புகார் சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணைக்கு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபியிடம் விசாரிக்க கூறியதை திரும்பப்பெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி தன் பெயரில் பொய்யான புகார் சமூக வலைதளத்தில் பரவுவதாக தெரிவித்த காரணத்தினால் தமிழக போலீசார் விசாரிக்கும்படி கூறியதை வாபஸ் பெற்றதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில் அடையாறு கலாஷேத்ராவில் இன்று மாலை 3 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா ரகசியமாக வந்து விசாரணை நடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து வந்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மாவிற்கு சென்னை காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா என கேட்கப்பட்ட போது, அதற்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் பாதுகாப்பு வேண்டாம் எனக் கூறியதாக தெரியவந்துள்ளது.
அவர் செல்லும் வாகனத்திற்கு மட்டும் விஐபி எஸ்கார்ட் பாதுகாப்பை வாங்கிக் கொண்டு அவசரமாக சென்னை அடையாறு கலாஷேத்ரா சென்று விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அடையாறு கலாஷேத்ராவில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாலியல் தொந்தரவு தொடர்பான விசாரணையை பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விதிப்படி தனியாக விசாரிக்காமல், மாணவ, மாணவிகள் என அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் அடையாறு கலாஷேத்ராவில் நடந்த பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சில மாணவர்கள் ரேகா சர்மாவிடம் புகார் அளிக்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு சென்னையில் இன்று இரவு தங்கும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா நாளை டெல்லி செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தொடர்புடைய மாநிலத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, உறுப்பினராக இருக்கும் குஷ்பூவை கூட அழைத்துச் செல்லாமல் ரகசியமாக விசாரணை நடத்தியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் அடையாறு கலாஷேத்ராவில் பாலியல் தொந்தரவு மாணவிகளுக்கு நடைபெறுவதாக முதலில் கூறி விசாரணைக்கு உத்தரவிட்ட தேசிய மகளிர் ஆணையம், திடீரென வாபஸ் பெற்று ரகசியமாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் அடையாறு கலாஷேத்ராவில் வந்து மூன்று மணி நேரம் மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்திச் சென்றது ஏன் என்ற பெரும் சந்தேகம் மாணவ, மாணவிகளிடம் எழுந்துள்ளது.
சென்னை ஐஐடி நிர்வாகத்தை போன்று, மத்திய அரசின் கீழ் செயல்படும் அடையாறு கலாஷேத்ராவிலும் நடக்கும் தவறுகள் குறித்து மறைக்கும் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா ரகசியமாக விசாரணை செய்து சென்றுள்ளாரா என மாணவிகளிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அப்பா படிக்க சொன்னது ஒரு குத்தமா? - இன்ஸ்டா குயின் திடீர் தற்கொலை!