சென்னை: ஐஐடியின் ஆராய்ச்சி மையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு தேவையான கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், சூரியசக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரி (vanadium redox flow battery) தொழில்நுட்பத்தை ஐஐடியின் வேதியியல் துறையின் பேராசிரியர் கோதண்டராமன் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ”வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரி எரிசக்தியை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது. வழக்கமாக பயன்படுத்தப்படும் பேட்டரியில், ஆக்டிவ் மெட்டிரியல் உள்ளேயே இருக்கும். ஆனால் ரெடாக்ஸ் ப்ளோ பேட்டரியில் ஆக்டிவ் மெட்ரியில் தனியாக கீழே இருக்கும். அதனால் ஆக்டிவ் மெட்ரியல் டேங்கை பூமிக்கு கீழேயே வேறு இடத்திலும் பாதுகாப்பாக, வெளியில் தெரியாத வகையில் வைத்துக் கொள்ளலாம். பேட்டரி மட்டும் தான் மேலே இருக்கும்.
இந்த பேட்டரியில் எரிசக்தியை பிரித்து வைத்துக் கொள்ள முடியும். பேட்டரி அளவையும், டேங்கின் அளவையும் அதிகரித்தால் சேமிக்கும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கும். மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்தும் வசதியை வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் பயன்படுத்த முடியும்.