சென்னை:சென்னை ஐஐடிக்கு நாட்டின் மிகப்பெரிய மற்றும் உயர்ந்த தரமதிப்பீடு உடைய பசுமை வளாகங்களில் ஒன்றான பிளாட்டினம் சான்றிதழை இந்திய பசுமை கட்டிடக் கவுன்சில் வழங்கி உள்ளது. பிளாட்டினம் மதிப்பீடு என்பது, கல்வி நிறுவனம் மிகச்சிறந்த இயற்கைவளத் திறனையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் நிரூபித்திருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதை தவிர்த்து, செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது மட்டுமின்றி, மதிப்புமிக்க வளங்களையும் பாதுகாக்கிறது.
மேலும், சென்னை ஐஐடி நாளொன்றுக்கு இரண்டு டன் கலப்புக் கழிவுகளை செயலாக்கும் திறன் கொண்ட திடக்கழிவு எரியூட்டு வசதியை தனது வளாகத்தில் நிறுவியுள்ளது. இதரக் கழிவுகள் குப்பைக் கிடங்கை நிரப்ப எடுத்துச் செல்லப்படுகின்றன. இது குறித்து சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்) பேராசிரியை லிஜி பிலிப் கூறுகையில், "மிகச்சிறந்த இயற்கை வளத்திறன், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்புற சுற்றுச்சூழலின் தரம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், பல்வேறு அளவீடுகள் மூலமாக வளாகங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
நீடித்த இயற்கை அமைப்பு, போக்குவரத்து வசதிகள், விழிப்புணர்வு மற்றும் கல்வியில் ஆழ்ந்த கவனம் செலுத்துதல் போன்றவை இந்த முன்முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பசுமை வளாக மதிப்பீடு நீண்டகாலச் செலவு சிக்கனத்திற்கு வழிவகுப்பது
மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களின் நற்பெயரை உயர்த்தவும், சுற்றுச்சூழல் உணர்வுள்ள தனி நபர்களை ஈர்க்கவும் வழிவகுக்கிறது.
மேலும், காலநிலை மாற்றம், வளங்களை அழித்தல் போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நிலையான எதிர்காலத்திற்கும் இது பங்களிப்பை வழங்குகிறது. தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பொறுப்புடன்
கூடிய இயற்கை வள மேலாண்மை மற்றும் பராமரிப்பை வலியுறுத்துகிறது.
611 ஏக்கர் பரப்பளவுடன் நாட்டின் மிகப்பெரிய வளாகங்களில் ஒன்றான சென்னை ஐஐடி, இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொறுப்பான வளாக மேம்பாடு ஆகியவற்றில் இக்கல்வி நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் எடுத்து இயங்குவதாக அமைந்திருக்கிறது. பசுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பிற கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அளவுகோலாக இந்த அங்கீகாரம் விளங்குகிறது.
இந்த கல்வி நிறுவனத்தில் உள்ள பரந்த வனப்பகுதி வெப்பத்தை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பதால், நகரின் இதர
பகுதிகளைக் காட்டிலும், இந்தப் பகுதி 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது. நகர்புறங்களில் பசுமையான இடங்களின் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளை இந்த குளிர்ச்சியூட்டும் விளைவு எடுத்துக்காட்டுகிறது.
தற்போது இக்கல்வி நிறுவனத்தில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 4 டன் திடக்கழிவு உருவாகிறது. சேகரிக்கும் இடத்திலேயே கழிவுகள் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு பிரிக்கப்படும் கரிமக் கழிவுகள் உரமாகவோ, காற்றில்லா செரிமானமாகவோ மாற்றப்படுகின்றன.
ஏற்கனவே இங்கு ஒரு டன் திறன் கொண்ட பயோடைஜஸ்டர் செயல்பட்டு வரும் நிலையில், 2 டன் திறன் கொண்ட மற்றொரு பயோடைஜஸ்டர் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் பயோகேஸ் இக்கல்வி நிறுவன விடுதியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கனிமக் கழிவுகள் மேலும் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், நாளொன்றுக்கு 300 முதல் 400 கிலோ அளவுக்கு கிடைக்கும் கலப்புக் கழிவுகள், குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வசதிகளுடன் எங்களது வளாகம் பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற வளாகமாக (ஜீரோ வேஸ்ட் டிஸ்சார்ஜ் கேம்பஸ்/Zero Wastage Discharge Campus) இருக்கும். எரியூட்டி இயந்திரத்தில் இருந்து மீட்கும் ஆற்றலுக்கான மீட்பு அமைப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது நிலைத்தன்மை குறித்த இக்கல்வி நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது" எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "குப்பைத் தொட்டியில் இருந்து துண்டாக்கும் இயந்திரத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும்போது, உருவில் பெரிதாக உள்ள உலோகங்கள், கண்ணாடித் துண்டுகள் போன்றவை கைகளால் எடுக்கப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன. கலப்பு கரிமம், உணவு, பிளாஸ்டிக், அட்டைகள், பேக்கேஜிங் கழிவுகள் கலப்பு வடிவில் இருந்தால் ரோட்டரி உருளையில் எரிக்கப்படுகின்றன. சூடான ப்ளூ வாயுக்கள் சைக்ளோன் எந்திரத்தின் காற்றைப் பயன்படுத்தி குளிர்விக்கப்படுகின்றன.
இதனால் வாயுக்களைக் குளிர்விக்க தண்ணீரைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. வாயுக்கள் 150 டிகிரி செல்சியஸ்-க்கு குளிர்ந்த பிறகு, பை வடிகட்டி, ஈரத்தேய்ப்பான், உலர் தேய்ப்பான் என அடுத்தடுத்து அனுப்பப்பட்டு, இறுதியாக விதிமுறைகளுக்கு உட்பட்டு உமிழ்வை வெளியேற்றும். திடக்கழிவு எரியூட்டியில் இருந்து சேகரிக்கப்படும் சாம்பலை செங்கல் தயாரிப்பு அல்லது கட்டுமானங்களில் பயன்படுத்தலாம். இதனை ஒரு பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற அலகு என்றே கூறலாம்.
நீர் சேகரிப்பு:இக்கல்வி நிறுவன வளாகத்தில் மேற்கூரை, கூரை அல்லாத பகுதிகளில் இருந்து கிடைக்கும் 100 சதவீத மழைநீரும்
சேகரிக்கப்பட்டு முறையே 165 மில்லியன் லிட்டர், 105 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
கழிவு மேலாண்மை: இந்த வளாகத்தில் 100 சதவீத உணவுக் கழிவுகளும், இயற்கைக் கழிவுகளும் பயோகேஸ் ஆலைகள்
மூலமாகவும், மண்புழு உரத் தயாரிப்பின் மூலமாகவும் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகள் திறம்படக் கையாளப்படுகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு: இக்கல்வி நிறுவன வளாகத்தில் உருவாகும் கழிவுநீரைச் சுத்திகரிக்க நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவு கொண்ட அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கழிவுநீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு கழிப்பறைப் பயன்பாடு, புல்தரை பராமரிப்பு, குளிரூட்டும் அமைப்பு போன்றவற்றுக்கு 100 சதவீதம் பயன்படுத்தப்படுவது பொறுப்பான நீர் மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது.
பரந்து விரிந்த பசுமை: மொத்த பரப்பளவில் 70 சதவீதம் அளவுக்கு பிரமாண்டமாக, அதாவது 16 லட்சத்து 48 ஆயிரத்து 939 சதுர மீட்டர் அளவுக்கு பசுமைத் தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வளாகத்தில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு 65 ஆயிரத்து 425 மரங்கள் ஓங்கி வளர்ந்திருப்பதால் சுற்றுச்சூழல் அழகியல் மேம்படுவதுடன் காற்றின்
தரம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பங்களிப்பை வழங்குகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'எனது மண் எனது தேசம்'; காட்பாடியில் நடைபெற்ற மண் சேகரிக்கும் பணி!