சென்னை :சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 7 பேர் பதிலளிக்க வேண்டும் என எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை கண்கணிக்கும் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினர் ரவீந்திரகுமார், ராஜா, சசிகலாவதி, பாலமுருகன், லதாமகேஸ்வரி ஆகிய 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்த இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நீதிமன்றங்களுக்கு மனுக்கள் மீதான விசாரணை மாற்றப்பட்டு இறுதியாக சிவகங்கையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததால், சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து பன்னீர்செல்வம் உள்பட 7 பேரை விடுவித்து ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட். 31) உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதி ஒவ்வொரு உத்தரவுகளையும் நாம் ஆய்வு செய வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்தார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் பின்னணியில் யாரோ உள்ளனர் என்றும் ஆட்சிக்கு முன்னர் ஒரு நிலைபாடும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மற்றொரு நிலைப்பாடும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ளதாக நீதிபதி கூறினார்.
தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமுதாயத்தை சிதைத்து விடும் என்றும் 272 சாட்சிகளிடம் 3 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் ஏன் வழக்கை முறையாக நடத்தவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆட்சியில் இருக்கும் போது எந்த நடவடிக்கையையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுப்பதில்லை மாறாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தவறு நடந்துள்ளதாக விசாரணையை தொடங்குவதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கட்டாயம் நீதிமன்றம் கண்கானிக்க வேண்டிய நலையில் உள்ளதாகவும் தவறுக்கு துணை போகும் எந்த நடவடிக்கையையும் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்காது என்று நீதிபதி தெரிவித்தார். 374 சதவிகிதம் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, பின்னர் எந்த குற்றமும் நடைபெறவில்லை என கூறுயிருப்பதாக கூறிய நீதிபதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 7 பேரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க :Toll Gate Price increase : தமிழகத்தில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு... அதிருப்தியில் வாகன ஓட்டிகள்!