தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது தொடர்பாக, நாளை எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Feb 2, 2021, 7:06 PM IST

எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, இப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா, குழலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன்முதலில் 1986இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது. எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழ்நாடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று, இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பில், மாநில அளவிலான இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் எனக் கூறியுள்ளதாகவும், படிப்புகளை ரத்து செய்துள்ளதால் 45 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக பல்கலைக்கழகம் தரப்பிலும், அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன்? என நாளை எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details