சென்னை:பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த 2018-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதே போல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் (சுட்டுரையில்) பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
அவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணக்கு வந்தபோது, எச்.ராஜா தரப்பில், அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்தி தான் என்றும், ஆதாரங்கள் ஏதும் இல்லை. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று டிவிட்டர் பதிவிட்டார் என்பதற்கும் ஆதாரம் சேகரிக்கப்படவில்லை.
எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் எச்.ராஜா மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.