தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கக் கோரிய வழக்குத் தள்ளுபடி

முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு, தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

By

Published : Jan 31, 2022, 2:39 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில், முகாம்களுக்கு வெளியில் வசிக்கும், 32 ஆயிரத்து 242 இலங்கை தமிழ் அகதிகளுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமு மணிவண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலம் முழுவதுமுள்ள 108 முகாம்களில் உள்ள 94 ஆயிரத்து 69 அகதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், கரோனா ஊரடங்கின்போது, முகாமுக்கு வெளியில் வசித்த அகதிகளுக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொந்த தொழில், வேலைக்குச் செல்வதால் முகாமுக்கு வெளியில் வசிப்பவர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கரோனா உதவி அனைவருக்கும் வழங்கப்பட்டது என்றும், தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி அரசைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், அரசின் முடிவில் எந்தச் சட்டவிரோதமும் இல்லை எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: உயர் கல்விக்கான வரைவு அறிக்கை பல்கலைக்கழக மானியக் குழு வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details