தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தடி நீர் திருடப்படுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சென்னை: இதுவரை சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சியவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

chennai HC

By

Published : Jul 11, 2019, 6:29 PM IST

Updated : Jul 11, 2019, 6:44 PM IST

சென்னை நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதைத் தடுக்கக்கோரி இளையராஜா என்பவரும், சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதைத் தடுக்கக் கோரி நாகேஸ்வர ராவ் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, வணிக நோக்கத்துக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறா அல்லது சொந்த தேவைக்காக எடுக்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் சந்திரகுமாரை ஆணையராக நியமித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின்படி நேரில் ஆய்வு நடத்திய சந்திரகுமார், தினமும் 250 முதல் 300 லாரிகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தண்ணீரை எடுக்க விவசாயத்துக்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு மோட்டார்கள் பறிமுதல் செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுத்ததாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை அலுவலர் உள்பட மூவருக்கு எதிராக மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், இதுவரை சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சியவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Last Updated : Jul 11, 2019, 6:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details