தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 6) உயிரிழந்தது.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

By

Published : Aug 6, 2023, 11:04 AM IST

சென்னை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் தான், முகமது மஹீர். குறை மாதத்தில் பிறந்த இந்த குழந்தை 1.5 கிலோ எடை மட்டுமே கொண்டதாக இருந்தது. இக்குழந்தைக்கு குறைமாத குழந்தைகளுக்கு இருக்கின்ற பல்வேறு பிரச்னைகள் கடந்த ஓராண்டாக இருந்து வந்துள்ளது. தலையில் ரத்தக்கசிவு, இதயத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளன. தொடர் சிகிச்சைகள் மூலமாகத்தான் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி வந்துள்ளனர்.

மேலும் அந்த குழந்தைக்கு தீவிர Hydrocephalus எனும் மூளையில் நீர்க் கசியும் கோளாறு இருந்தது. இதனால் குழந்தை முகமது மஹீர் தலையில் நீர்க்கசிவு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அதைத்தொடர்ந்து குழந்தை தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற முடிவு செய்து அதற்காக குழந்தையின் தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. ஆனால், அந்தக் குழாய் குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது.

அதைத் தொடர்ந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த குழாய் அகற்றப்பட்டு மீண்டும் குழாய் பொருத்தப்பட்டது. பின்னர் மருந்து கொடுப்பதற்கும், திரவ உணவு ஏற்றுவதற்கும் வசதியாக குழந்தையின் வலது கையில் ஊசி பொருத்தப்பட்டது. ஊசி பொருத்தப்பட்ட அந்த கை கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, கருஞ்சிவப்பு நிறத்துக்கு வந்ததுள்ளது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் மீண்டும் மருத்துவர்களை அணுகினர்.

மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக குழந்தை மஹீர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் கையில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதாக, குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

ஆனால் பெற்றோர், மருத்துவர்களின் தவறான சிகிச்சையின் காரணமாகத்தான் குழந்தையின் கை அகற்றப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினர். குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தையின் கை அகற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தது. இந்நிலையில் குழந்தை மஹீர் இன்று காலை (ஆகஸ்ட் 6) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறது.

உடல்நிலை சீராக இருப்பதற்காகவும் ஆக்சிஜன் அளவு சீராக செயல்படவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குழந்தையின் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாமல் மெல்ல மெல்ல குழந்தையின் உடல் மெலிந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:கன்னியாகுமரியில் 2-வது நாளாக காற்றாடி திருவிழா:உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details