சென்னை:'எல்லா நண்பர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் நான் சீக்கிரமாக ரெடியாகிவிட்டு மீண்டும் வருவேன். யாரும் இதனால், கவலைப்பட வேண்டாம். நான் திரும்பவும் மாஸ் எண்ட்ரி கொடுப்பேன். என்னோட கேம் என்னை விட்டு போகாது; நீங்க நான் ரிட்டர்ன் வருவேனு நம்பிக்கையா இருங்க.. லவ் யூ ஃப்ரண்ட்ஸ் அண்டு ஃபேமிலி' உயிரிழந்த மாணவி பிரியா(17), தனது வாட்ஸ் அப்பில் கடைசியாக ஸ்டேட்டஸ் வைத்திருந்துள்ளார்.
மாணவி பிரியாவின் மரணம் குறித்து IPC 174 சந்தேக மரணம் (அ) இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பணியிலிருந்த இரண்டு மருத்துவமனை மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவர்களின் அஜாக்கிரதையே கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு காரணமாக உள்ளது என்று அமைச்சர் கூறிய நிலையில் மருத்துவ விசாரணை குழு மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே பிரியாவின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரியாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.