தூத்துக்குடிக்கு மேலும் 2 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய சென்னை மாநகராட்சி சென்னை:திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த வாரம் தொடங்கி கனமழை பெய்தது.
இதனால், 4 தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு, மாநில அரசு, தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருநெல்வேலி பகுதியில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், தூத்துக்குடி பகுதியில் அநேக பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பணிகளுக்காக குடிநீர், உணவுப் பொருட்கள், ஆடைகள், நாப்கின், காலணிகள் உள்ளிட்டவைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி சார்பில், பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் 2 வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து மாநகராட்சி சார்பில் தெரிவித்ததாவது, "டிசம்பர் 19ஆம் தேதி அன்று சென்னை மாநகராட்சியின் சார்பில், அதிகனமழையினால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 வாகனங்களிலும், கப்பற்படை ஹெலிகாப்டர் மூலமும் ரொட்டி, பிஸ்கெட், பால் பவுடர், குடிநீர் பாட்டில்கள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு டிச.20ஆம் தேதி மேலும் ஒரு வாகனத்தில் ரொட்டி, குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், ரஸ்க், நூடுல்ஸ், போர்வை, துண்டு, டூத்பிரஷ் (Toothbrush), குளியல் சோப்பு மற்றும் சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இன்று (டிச. 21) பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 9,000 பிரட் பாக்கெட்டுகள், 3,000 பன் ரொட்டி பாக்கெட்டுகள் மற்றும் 1 லிட்டர் கொண்ட 1200 குடிநீர் பாட்டில்களும், ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி பங்களிப்புடன் 5 கிலோ அரிசி, சாம்பார் மற்றும் ரசப் பொடி பாக்கெட்டுகள், பருப்பு, பிஸ்கெட் ஆகியவற்றை கொண்ட 1000 பெட்டிகளும், கோயம்பேடு காய்கறி சந்தை சங்கம் பங்களிப்புடன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், சௌசௌ, பச்சை மிளகாய் உள்ளிட்ட 3 டன் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்களும் 2 வாகனங்களில் அனுப்பி வைக்கபட்டன" என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! மழை வெள்ளத்தை சுத்தம் செய்த போது சோகம்!