சென்னை: சென்னையில் நடைபெறும் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 421 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 93 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ததில் 77 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர், பாலியல் தொழில் நடத்தியதாக 13 பேர், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 4 பேர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் ஒருவர் என மொத்தம் 615 பேர் சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 16 முதல் 22 வரையிலான ஒரு வாரத்தில் 27 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்: அதன்படி, கடந்த நவம்பர் 2 முதல் 20 வரையிலான 15 நாட்களில், போதைப்பொருள் மற்றும் மன மயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 248 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 783 கிலோ கஞ்சா, 10 கிராம் கோக்கைன், MDMA எக்ஸ்டஸி, 85 டேபெண்டடோல் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகள் என 8O லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த நவம்பர் 8 அன்று கீழையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.