சென்னை: போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 12.09.2023 முதல் 28.09.2023 வரை மாநிலம் முழுவதும் 8 பெண்கள் உட்பட 223 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 386 கிலோ கஞ்சா, 85 கிராம் மெத்தாம்பிடாமைன், 690 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் வரை தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 812 வெளிமாநில கடத்தல்காரர்கள் உட்பட மொத்தம் 9 ஆயிரத்து 634 போதைப் பொருள் விற்பனை கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெராயின், 24 ஆயிரத்து 511 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்ததாக போலீசார் கூறினர்.
மேலும், 2 ஆயிரத்து 304 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு 5 முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் 137 பேர் தடுப்புக்காவல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.