சென்னை:சென்னை கொரட்டூர் அடுத்த வாகை நகரைச் சேர்ந்தவர், ஜெய்கணேஷ். இவர் கடந்த புதன்கிழமை, ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி எனும் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, மறுநாள் தெனாலியில் இருந்து சென்னைக்கு ஜன் சதாப்தி விரைவு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அபோது ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து பேசின் பிரிட்ஜ் வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் வேகம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மூன்று மர்ம நபர்கள் ரயிலில் ஏறி, ஜெய் கணேஷை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ஆப்பிள் ஐ போனை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து ஜெய் கணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த போஜராஜன் நகர் சார்லஸ் (21), கார்த்தி (20), அசோக்குமார் (19) ஆகியோர் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மீனம்பாள் நகர் சாலையில் பாலத்தின் கீழ் பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
கோயில் உண்டியலில் கைவரிசை:சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று வடபழனி முருகன் கோயில். இந்த கோயிலில் உற்சவர் சன்னதி முன்பு பக்தர்கள் காணிக்கை போடுவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த உண்டியல் அருகில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர், இன்சுலேசன் டேப்பை உண்டியலின் துவாரத்தில் விட்டு உண்டியலில் இருந்த பணத்தை திருடி கொண்டிருந்தார்.
இதனைக் கண்டதும் கோயில் ஊழியர் சந்தோஷ் என்பவர் பக்தர்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து பார்த்தபோது கையில் இன்சுலேஷன் டேப்பும், உண்டியலில் இருந்து திருடிய பணமும் இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த நபரை வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர் கோடம்பாக்கம் அடுத்த டிரஸ்ட்புரம் ஏழாவது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், அவர் தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வருவதும், தனது செலவுக்கு பணம் இல்லாதபோது கோயிலுக்கு சாமி கும்பிடுவதுபோல் வந்து உண்டியலில் இன்சுலேஷன் டேப் மூலம் பணத்தை திருட முயன்றதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் மீது ஏற்கனவே இது போன்ற பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்ததுள்ளது.
கொலை: புழல் பகுதிக்கு உட்பட்ட காவாங்கரை பகுதி அடுத்த கே.எஸ்.நகர் 15வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன் சத்யா (22). இவர் மீது ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்த சத்யா, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி அன்று இரவு எழும்பூர் அடுத்த மாண்டியத் சாலையில் வைத்து ஒரு கும்பல் சத்யாவை வெட்டிக் கொன்றது.
முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு புளியந்தோப்பு பகுதியில் ரவுடி நாய் ரமேஷ் கொல்லப்பட்ட வழக்கில், சத்யா முக்கிய குற்றவாளி ஆவார். ரமேஷின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக அவரது தம்பி ரூபன் மூன்று ஆண்டு காத்திருந்து சத்தியாவை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ரூபன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட நான்கு பேரை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில், நேற்று பெரும்பாக்கத்தை சேர்ந்த தினேஷ்குமார் (23) என்பவரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கூடங்குளத்தில் தரைதட்டிய மிதவை கப்பல்; தரை மார்க்கமாக கொண்டு வர முடிவு!