சென்னை:கடந்த 2 இரண்டு நாட்களாக பெய்த பெருமழையின் எதிரொலியாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 16 பேர் கொண்ட 4 குழுக்கள் செல்கின்றனர் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கடந்த டிச.16 முதல் கனமழை பெய்தது. இதனால், 4 தென் மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது.
கனமழையின் எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதை அடுத்து அணைகளுக்கு வரும் தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளமாக வந்து சேரும் தண்ணீர் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையைத் தாண்டி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் தொடங்கி, கடலில் சேரும் திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் வரையிலும் ஆற்றின் இருபுறமும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளிலும் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், வெள்ள மீட்பு பணிக்காக 16 பேர் கொண்ட குழுவினர் இன்று (டிச.19) செல்கின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 16 அதிகாரிகளை திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இந்த 16 பேர் 4 குழுக்களாக பிரிந்து 4 மாவட்டங்களில் உள்ள வெள்ள மீட்புப் பணிகளின் ஈடுபடுவார்கள். குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலிருந்து, தண்ணீரை இறைக்கும் மோட்டார்கள் செல்கின்றன. மேலும், கோவை மாநகராட்சியில் இருந்து 29 பம்புகளும், சென்னை மாநகராட்சியில் இருந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் இருந்து 71 பம்புகள் செல்கின்றன” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:TN South Flood Live Update: தென் மாவட்டங்களுக்கு விரையும் சென்னை குழு!