சென்னை:அதிமுக ஆட்சியில் தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பள்ளிகளில் செய்த வரி ஏய்ப்பு முறைகேடு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஏப்ரல் மாதத்திற்கான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஏப்.28) கூடியது. அப்போது நேரமில்லா நேரத்தில் பேசிய கணக்கு குழுத் தலைவர் தனசேகரன், "சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் சொத்து வரி ஏய்ப்பு செய்துள்ளன. அதற்கு நோட்டீஸ் வழங்கியும் ஒரு மாதம் ஆகியும் பதில் அளிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் 50 சதவீதம் வரி குறைப்பு செய்துள்ளனர்.
குறிப்பாக, ஆலந்தூரில் இயங்கிவரும் "ரேடிசன் ப்ளூ ஜி.ஆர்.டி" ஹோட்டலின் சொத்துவரியை ஆய்வு செய்ததில், 2018-2019 நிதியாண்டு முன் வரை அரையாண்டு வரி ரூ.57,41,410-ஆக இருந்தது. அதன் பின்னர், ரூ.19,43,025 எனக் குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 66% குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே ஆலந்தூரில் செயல்பட்டு வரும் "தி விஜய் பார்க்" (The Vijay Park) ஹோட்டலின் 2018-19 நிதியாண்டு அரையாண்டு சொத்துவரி ரூ.6,56,515 ஆக இருந்து ரூ. 5,18,120 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கத்தில் இயங்கிவரும் "பார்க் பிளாசா ஹோட்டலின் 2018-19 நிதியாண்டு அரையாண்டு சொத்துவரி ரூ. 44,97,605 இருந்து ரூ.14,22,205- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது போல இன்னும் 8 கிராண்ட் ஹோட்டல்களில் வரிகளும் பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.