சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 நாட்களாக கரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை 100 என்கின்ற எண்ணிக்கையைத் தாண்டி உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சியின் சார்பில் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சியின் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக RT PCR பரிசோதனைகள் மேற்கொள்ள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தொற்றுப்பாதிப்பு சற்று அதிகமாக உள்ள மண்டலங்களான அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு இரண்டு என மொத்தம் 8 நடமாடும் RT PCR பரிசோதனை குழுக்கள் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளன.
தொற்று பாதித்த நபர்களுக்கும் தொற்றிற்கான அறிகுறியுள்ள நபர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக பாரசிட்டமால் 500 மி.கி., வைட்டமின் சி 500 மி.கி. மற்றும் ஜிங்க் 50 மி.கி. ஆகிய மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தலா 500 மாத்திரை தொகுப்புகள் தயார்நிலையில் உள்ளன.