நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி ஊரடங்கு அமலில் உள்ளது. கிட்டத்தட்ட 50 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும் கரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.
குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து, பெரியவர்கள் முதல் சிறுவர்கள்வரை வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப்போய் உள்ளனர்.
இதில் குறிப்பாக கோடைக் காலங்களில் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு உற்சாகத்துடன் தெருக்களில் ஓடி, விளையாடி மகிழும் சிறுவர், சிறுமியர்கள், இந்தக் கோடையில் வீடுகளை விட்டே வெளியேற முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். பெற்றோரும் இவர்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கி வைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்களை உற்சாகப்படுத்தி, இவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஓவியப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள், ஓவியங்களை வரைந்து அவர்களின் பெயர், வகுப்பு, பள்ளி விவரங்களுடன் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுந்த இடைவெளி, வீட்டில் இரு, விலகி இரு, முகக்கவசம் அணியுங்கள், கோவிட் 19, கரோனாவுக்கு எதிராக சென்னை இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றின் கீழ் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதியப்படும் ஓவியங்களில், தினம் ஒரு சிறந்த ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கில் ’ஸ்டோரீஸ்’ ஆகப் பகிரப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :ஆபத்துக்கு மத்தியில் பணிபுரிவதே காவல்துறையினரின் பணி - சென்னை காவல்தறை ஆணையர்