சென்னை:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற நாளில் இருந்து களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றியவர் ஆணையர் ராதாகிருஷ்ணன்.
மேலும் டெங்கு விழிப்புணர்வு பணி, தீவிர தூய்மை பணி, மழை நீர் வடிகால் பணிகள் என்று தினமும் களத்தில் ஆய்வு செய்து வருகிறார். தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. சென்னையிலும் அதன் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இதையும் படிங்க:கடல் கடந்த காதல்; தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம்.. கொடைக்கானலில் மும்மதப்படி நடந்த சூப்பர் கல்யாணம்!
டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படுகிறது. இந்த கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இந்த நோயின் தாக்கம் அதிகமானால் உயிரிழப்பை கூட ஏற்படுத்தும் என்பதால் அதீத காய்ச்சல், தொடர்ந்து 4 அல்லது 5 நாட்களுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வந்தாலோ அல்லது உடலில் ஏதேனும் படை போல் இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னையில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், மக்களிடம் நேரடியாக சென்று டெங்கு கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்கி வந்தார். இதனால் அவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வார காலமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ராதாகிருஷ்ணன் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வரும் ராதாகிருஷ்ணனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:பள்ளிகளில் குத்து பாடல்கள் ஒலிப்பது முறையா?... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!