சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். வழக்கம் போல பள்ளி முடிந்ததும் தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது சிறுமியை மாடு அதன் கொம்பால் குத்தி தூக்கி வீசியது.
பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில், அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்றினர். அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும், சென்னை ஆணையர் பல்வேறு பணிகள் ரீதியாக தினக் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். மாடு முட்டிய சம்பவத்திற்கு பிறகு, மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக தீவிர ஆய்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இறங்கி உள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு பணிகளை ஆய்வு செய்ய, சென்னை செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (ஆகஸ்ட்13) ஆய்வு மேற்கொண்டார்.