சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த சேவைத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 25) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இணை ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “சென்னை மாநகராட்சி பகுதியில் பல்வேறு துறைகளின் சார்பில் மெட்ரோ பணி, குடிநீர் குழாய் புதைத்தல், பாலம், சாலை வெட்டுதல் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளில், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக சாலை, மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றுக்கு போக்குவரத்து போலீசாரின் அனுமதி, இதர துறைகளின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாததால் அவை விரைந்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி தொடர்புடைய சேவைத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்த பல்துறை அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது” என கூறினார். இந்த கூட்டத்தில் சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கிய அறிவுறுத்தல்களாவது,
உரிய அனுமதியுடன் சாலை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டும்:பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பதித்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மின்துறை பணிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்போது ஏற்படுகின்ற சாலை வெட்டுக்களை அந்தப் பணிகள் முடிந்த பின் உடனடியாக சாலை சீரமைக்கும் பணிகளை தொடர வேண்டும்.