சென்னை: சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், ஆறு ஆண்டுகளாக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று, திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். மேயர் பிரியா பதவியேற்ற பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், குறைந்த வயதுடைய மேயரான பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கணக்கையும், கடந்தாண்டு வரவு செலவு கணக்கையும் மேயர் பிரியா முன்னிலையில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்ய உள்ளார்.
தொடர்ந்து வரும் 28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும், கூட்டத்தின் இறுதியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும் எனவும்; மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் இருக்கும் என சென்னை மாநகர மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.