சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் இன்று(மார்ச்.27) தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேயர் பிரியா இரண்டாவது ஆண்டாக இன்று மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மேயர் பிரியா தனது பட்ஜெட் உரையில், கடந்த நிதி ஆண்டில் 770 கோடி ரூபாயாக இருந்த நிதிப் பற்றாகுறை 340.25 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
பேருந்து, சாலை - சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.881.20 கோடி ஒதுக்கீடு.
மழைநீர் வடிகால் - மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.1,482.70 கோடி ஒதுக்கீடு.
திடக்கழிவு மேலண்மை - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணிகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு மற்றும் குப்பை கொட்டும் கிடங்குகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.260.52 கோடி ஒதுக்கீடு.
பாலங்கள் - உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் மூலதன மானியம் மூலமாக புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிகளுக்காக ரூ.102.50 கோடி ஒதுக்கீடு.
கட்டிடம்- பெருநகர சென்னை மாநகராட்சியில், NUHM திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, தூய்மை இந்தியா திட்ட நிதி ஆகியவற்றினை கொண்டு நகர்புற சுகாதார மையங்கள், கழிப்பறைகள், வாகன இயக்கூர்தி நிலையங்கள் கட்டுதல், பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டுதல், வணிக வளாகங்கள் கட்டுதல் மற்றும் பிற பணிக்காக ரூ.104.17 கோடி ஒதுக்கீடு.
மின்சாரம் - நிர்பயா திட்ட நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதி ஆகியவற்றின் மூலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிய தெரு மின்விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
இயந்திரப் பொறியியல்- சென்னை பெருநகர துப்புரவு பணிக்கு தேவையான வாகனங்களை நிர்பயா திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்ட நிதியின் கீழ் கொள்முதல் செய்ய ரூ.71.29 கோடி ஒதுக்கீடு.
கல்வி- பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ் கட்டிடத் துறையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.55 கோடியிலிருந்தும் மற்றும் சிறப்பு திட்டங்கள் துறையால் சீர்மிகு நகரம் (CITIIS) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.43 கோடியிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டுதவதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.4 கோடி கட்டிடத்துறையில் ஒதுக்கீடு. மேலும், மாணவர்களுக்கு தேவையான சாய்வு இருக்கைகள், ஆய்வுக்கூட உபகரணங்கள், கணிப்பொறி சார்ந்த உபகரணங்கள், வலைதள அமைப்புகள் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம் - பெருநகர சென்னை மாநகராட்சியில் NUHM திட்ட நிதியின் கீழ் கட்டிடத் துறையில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.24 கோடியிலிருந்து சுகாதாரத் துறைக்கான கட்டடங்கள் கட்டப்படும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பரிசோதனை கூடங்களை நவீனப்படுத்துதல், நாய் மற்றும் மாடு பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் மற்றும் கொசு ஒழிப்பு பணிக்கான புகை இயந்திரம் கொள்முதல் செய்ய ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு.
குடும்ப நலன் - நவீனப்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக தேவைப்படும் அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் அல்லது இதர உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூ.70 லட்சம் ஒதுக்கீடு.
சிறப்பு திட்டங்கள்- உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, சீர்மிகு நகரத்திட்டம், சிட்டீஸ் திட்டம், நிர்பயா திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம், சென்னை மாநகர பங்களிப்பு (உலக வங்கி நிதி) திட்டம் போன்ற பல்வகை நிதி ஆதாரங்களை கொண்டு மூலதனப் பணிகளை மேற்கொள்ள ரூ.313.45 கோடி ஒதுக்கீடு.
பூங்கா, விளையாட்டுத் திடல் - சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் மூலதன நிதி ஆகியவற்றினை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி நிலங்களில் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களை அமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு.
மண்டலங்கள்- தமிழ்நாடு அரசு மானியத்தின் மூலமாக நகர்ப்புற சுகாதார மையங்கள் கட்டுமானம், தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் மூலம் பொதுக் கழிப்பிடம் மற்றும் பிற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.191.64 கோடி நிதி ஒதுக்கீடு.
வார்டு மேம்பாடு - 2023-2024ஆம் நிதியாண்டிலும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டம் தொடர ஏதுவாக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு.
மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டம் - 2023 - 2024ஆம் நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ஏதுவாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்.. கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!