சென்னை:சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாயாக உள்ளது. மொத்தமுள்ள 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு ரூ.750 கோடி என ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் வாயிலாக, மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப்பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998-ன் படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்.30-க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்திருந்தது. அவ்வாறு சொத்து வரி செலுத்த தவறும் நிலையில், சொத்து உரிமையாளர்கள் அக்.1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி கடந்த ஜூன் மாதமே தெரிவித்து இருந்தது.
அதேபோல், கடந்த 2022–23ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டடுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டிருந்தது. இதேபோல, சொத்து உரிமையாளர்கள் அக்.1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.769 கோடி வரி வசூல்:இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 2ஆம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.31ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.