தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கொசு தொல்லை.. ட்விட்டரில் பறந்த புகார்.. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை! - நம்ம சென்னை செயலி

சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதாக ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்த நிலையில், கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு யுத்திகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

கொசுத் தொல்ல
கொசுத் தொல்ல

By

Published : Feb 11, 2023, 12:35 PM IST

கொசுவை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. முன்னதாக மழைக்கால நோய்களைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு யுத்திகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொசுத் தொல்லை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் பாடகி சின்மயி, “சென்னையில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. கைக்குழந்தை வைத்திருப்பதால் கொசு மருந்து பொருள்களைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து மக்கள் சிலர் நேரடியாக மாநகராட்சிக்குச் சென்று புகார் அளித்துள்ளனர். மேலும் பாடகி சின்மயின் ட்விட் வரலானதைத் தொடர்ந்து பலரும் மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து தங்களது புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்

மாநகராட்சி நடவடிக்கை:

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கையினால் இயங்கும் 240 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கொசுப்புழு உற்பத்தியில் நீர்வழித்தடங்களில் கொசுக்களை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கக் கூடிய 300 கைத்தெளிப்பான்கள் மற்றும் 120 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதுமட்டும்மின்றி கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப்புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 வார்டுகளுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியினைக் கட்டுப்படுத்த ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்கிங்ஹாம் மற்றும் ஓட்டேரி கால்வாய்களிலும், அடையாறு, மாம்பலம் கால்வாய் ஆகிய முக்கிய கால்வாய்களில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்:

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, “சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது உண்மைதான். தற்போதுதான் மழைக்காலம் முடிவடைந்துக் கோடைக்காலம் தொடங்கவுள்ளது. படிப்படியாகக் கொசுத் தொல்லைக் குறையும்.

கொசுவை ஒழிக்க மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அடையாறு கூவம் உள்ளிட்ட கால்வாய்களில் ட்ரோன் மூலம் லார்வா (Larva) அளவில் கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய்களில் புகை அடிக்கும் படையும் தொடங்கப்பட உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் தேவையான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் கொசு தெளிப்பான் மூலம் மருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3,400 நபர்கள் தற்போது இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவித்தனர்.

விரைந்து கொசுத் தொல்லையிலிருந்து மீள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொசுத் தொல்லை தொடர்பாகப் புகார் தெரிவிக்க 1913 தொடர்பு கொள்ளலாம் அல்லது நம்ம சென்னை செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

இதையும் படிங்க: பரப்பளவில் விரிவடையும் சென்னை நகரம்.. சிஎம்டிஏ திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details