சென்னை:தமிழ்நாட்டில் பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், மீண்டும் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர்கள் யாரும் பணியில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை ஒன்றை தற்போது அனுப்பி உள்ளார்.
குறிப்பாக, பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்ய முடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றும், இந்த கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
அதிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்புப் பணி, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோயில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது காவலர்கள் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரி செய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது.