தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி முதல் போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய காவலர்கள் வரை சென்னை நகரின் முக்கிய குற்றச் செய்திகள்! - இரு சக்கர வாகன விபத்து

Chennai Crime News: பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியது, பிரபல ரவுடி கைது செய்யப்பட்டது, போதையில் காவலர்கள் ஆம்புலன்ஸை இயக்கி விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட செய்திகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Crime news collection on crime incidents in Chennai
சென்னை மாநகரின் குற்றச் செய்திகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 4:28 PM IST

சென்னை: பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை நிறுவனம் தமிழகத்தில் ஏழு இடங்களில் கிளைகள் கொண்டது. ‌இந்நிறுவனம், பல்வேறு விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து, பல்வேறு திட்டங்களின் கீழ், பழைய தங்க நகைகள் மற்றும் மாத மாதம் பணம் செலுத்தும் திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில், பணம் செலுத்தியும் அதே பழைய தங்க நகைகள் கொடுத்து ஏமாற்றமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரினைத் தொடர்ந்து, நேற்று இரவு (அக்.19) கடையின் பூட்டை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கலையரசன் தலைமையில், பத்துக்கு மேற்பட்ட போலீசார் கடையின் உள்ளே சென்று அங்கிருக்கும் பொருட்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா என்ற பெண், அண்ணாசாலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 2021 பேட்ச் உதவி ஆய்வாளரான இவருக்கு, கடந்த 2015-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது.

காளிதாஸ் தபால் துறையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், துர்கா காவல் துறையில் பணிபுரிவது அவருக்கு பிடிக்காததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக நேற்று (அக்.19) உதவி ஆய்வாளர் துர்கா தற்கொலை முயற்சி செய்து மயங்கி விழுந்துள்ளார். அதைத் தொடர்ந்து, தற்போது அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இரு சக்கர வாகன விபத்து:ஹோண்டா இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு ராயப்பேட்டையில் உள்ள தசரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நியூ ஆவடி சாலை வழியாக திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை, ஆர்1 5 இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

இதில் இரண்டு ஓட்டுனர்களும் உயிரிழந்த நிலையில், பின்னால் அமர்ந்து வந்த இரண்டு நபர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 ஆண்டுகளுக்குப் பின் பிரபல ரவுடி கைது:கடந்த 2019-ஆம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொய்கை ரவியை, சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி டேனியல் சாலமன் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார். அதைத் தொடர்ந்து, சென்னையில் தனிப்படை அமைக்கப்பட்டு டேனியல் சாலமனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் மும்பை, பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களில் மாறி மாறி தலைமறைவாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி டேனியல் சாலமன் மீண்டும் சென்னைக்கு வந்தவுடன் அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, சென்னை சோலை மேடு பகுதியில் இருந்த தனிப்படை போலீசார், சாலமனை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதையில் காவலர்கள்: சென்னை புழல்சிறை காவலர்களான ஹரிகரன் (48) மற்றும் மாரி ஆகிய இருவரும், கொளத்தூர் ரெட்டேரி புதிய லட்சுமிபுரம் சாலையில், மாயா தனியார் மருத்துவமனை அருகில் நள்ளிரவு மதுபோதை மயக்கத்தில், அதிவேகமாக ஆம்புலன்ஸை ஒட்டி வந்துள்ளனர். அப்போது, காவலர்கள் நிதானத்தை இழந்த நிலையில், எதிரே நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் தூய்மை பணியாளர்கள் கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினர். பின்னர் மாதவரம் மஞ்சம் பாக்கம் பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவர்களை ஊதச்சொல்லி சோதனை செய்து, பின்னர் விவரங்களை எழுதிக்கொண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும், காவல் நிலையத்தில் இன்று (அக்.20) மதியம் இரு தரப்பினரையும் விசாரணைக்கு நேரடியாக வரும்படியாகவும் கூறினர்.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details