சென்டர் மீடியனில் மோதி மாநகரப் பேருந்து விபத்து; 5 பயணிகள் காயம் சென்னை: பிராட்வேவில் இருந்து கொரட்டூர் வரை செல்லக்கூடிய தடம் 35 எண் கொண்ட மாநகரப் பேருந்து இன்று காலை 11 மணியளவில் 25 பயணிகளுடன் கிளம்பியது. ஐ.சி.எப் குன்னூர் நெடுஞ்சாலை வழியாக பேருந்து சென்ற போது திடீரென பேருந்தின் குறுக்கே ஆட்டோ ஒன்று வந்ததால், நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநர் நடுவே இருந்த சென்டர் மீடியத்தில் பேருந்தை மோதியுள்ளார். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தேவராஜ் என்பதும் காயமடைந்த நபர்கள் ரூபினி, மாலினி, ராணி, திவ்யா, சந்தானம் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் பேருந்தை ஓட்டி வந்த போது திடீரென ஆட்டோ குறுக்கே வந்ததால் பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறி சென்டர் மீடியத்தில் மோதியதாக ஓட்டுநர் தேவராஜ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் தேவராஜ் மற்றும் நடத்துநரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து சென்டர் மீடியனில் மோதிய பேருந்தை கிரேன் மூலமாக சுமார் 1 மணி நேரமாக போராடி அகற்றினர். இதனால் சிறிது நேரம் ஐ.சி.எப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கலாஷேத்ரா பாலியல் புகார்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு