சென்னை: தி.நகர் கிரியப்பா சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (ஜூன் 4) ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "உலக முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு 1,000-க்கும் மேல் பதிவாகிவருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மூன்று மாதத்திற்கும் மேலாக தொற்று பாதிப்பினால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் தற்போது சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், விஐடி, சத்யசாய் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களிடம் இருந்து தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
ஐஐடி மற்றும் சத்யசாயி கல்லூரியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குணமடைந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல, விஐடி கல்லூரியில் 193 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அங்கு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.