சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பதற்றத்திற்குள்ளானது. ரயில் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் ரயில்வே போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இவர் இதற்கு முன் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் இணைப்பை துண்டித்தார்.