சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.
இந்நிலையில் சங்கர் நகர் காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரவணனின் செல்போனை பறித்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து சரவணன் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதேபோல், அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து சங்கர் நகர் போலீசார் இரண்டு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(22) எனத் தெரியவந்தது.
இதையடுத்து சங்கர் நகர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டனுக்கு உதவிய அவரின் நண்பர்களான நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த வினோத்(19), ஸ்டீபன்(22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.