சென்னை திருநின்றவூர் அடுத்த பண்டி காவனூர் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஎம் ஒன்று இயங்கிவருகிறது. திருநின்றவூரில் இருந்து பெரியப்பாளையம் செல்லும் சாலையிலுள்ள இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைந்து இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அப்போது அதிலிருந்த ரூ. 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கண்காணிப்பு கேமிராவில் ஸ்ப்ரே அடித்து இயந்திரத்தில் துளையிட்டு கொள்ளையடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.