சென்னை:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 397 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ட்ரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூபாய் 397 கோடி அளவிலான மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு ஒப்பந்ததாரர்கள் கூட்டு சதி செய்ததும் எப்படி ஊழல் நடந்ததும் என்பதற்கான ஆதாரங்களையும் வைத்துள்ளோம்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த ஊழலை வீட்டில் இருந்தே டெண்டர் அதிகாரியான காசியை வைத்து செயல்படுத்தியதற்கான முகாந்திரங்களையும் அறப்போர் இயக்கம் சார்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாராக கொடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 45 ஆயிரம் ட்ரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. பெரும்பாலான ஒப்பந்தங்கள் 2021 அக்டோபர் மாதம் கோரப்பட்டு நவம்பர் மாதம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம் இந்த ஒவ்வொரு டெண்டரிலும் இவர்கள் செய்த மிக முக்கியமான கூட்டு சதி என்பது கிட்டத்தட்ட 30 ஒப்பந்ததாரர்களை ஒவ்வொரு டெண்டரிலும் ஒரு ரூபாய் கூட மாறாமல், அதே தொகைக்கு ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளனர்.
டெண்டர் போடுவதற்கு முன்பாகவே அனைத்து ஒப்பந்ததார்களும் ஒன்று சேர்ந்து ஒரே தொகைக்கு கோர முடிவு செய்துள்ளனர். இதைப் பார்த்த உடனேயே இதில் மிகப்பெரிய கூட்டுசதி உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த டெண்டர்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், டெண்டர் ஆய்வுக்குழுவும் இந்தக் கூட்டு சதியில் உள்ளது என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் 2021-22-க்கான விலைப்பட்டியலில் டிரான்ஸ்ஃபார்மரின் விலை 7,89,750 என்று குறிப்பிட்டுள்ளது. சந்தை மதிப்பை விட ஒவ்வொரு டிரான்ஸ்ஃபார்மரும் 4 லட்சத்திற்கும் மேலாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒரு ஒப்பந்தத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 34 கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஊழலுக்கான மிக முக்கியப் புள்ளியாக திகழ்பவர், மின்சார வாரிய பொது ஊழியரான காசி என்னும் கொள்முதல் பைனான்சியல் கண்ட்ரோலர். இவர் மின்சார வாரியத்திற்கு வேலைக்குச் செல்லாமல் தினமும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்து தான் மின்சார வாரிய டெண்டர்களை இவர் நிர்ணயம் செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அவர் சில நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்குச் செல்லும் போட்டோ ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம்.