சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு, ஆண்டிற்கு 2 பருவங்களாக நடத்தப்படுகிறது. தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டுத்துறை நடத்தி வருகிறது. தேர்வு முடிந்த பின்னர் மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பொறியியல் கல்லூரியின் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
விடைத்தாள் திருத்தம் பணிகளில் ஈடுபடும் தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் தொகை குறித்த செலவு கணக்கினை பல கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கவில்லை. இந்தக் கல்லூரிகளின் தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது. பொறியியல் படிப்பிற்கான 3, 5, 7 பருவத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 13) வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதில் பல கல்லூரிகளின் மாணவர்களுக்கு முடிவுகள் வரவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத கல்லூரிகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு செலவுக்கணக்கை 4 ஆண்டுகளாகக் கல்லூரிகள் ஒப்படைக்கவில்லை. தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கும் ஆசிரியர்களை அனுப்பாமல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளிடம் இருந்து கணக்கு ஒப்படைக்கப்பட்ட உடன் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போபால் விஷவாயு கசிவு விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி!