சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்து இருந்தது. இன்று புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து கன மழையானது பெய்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயல் நாளை டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்குப் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அடையாறு ஆற்றில் பெருமளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தின் பின்பகுதிகள் வழியாக, விமான நிலைய ஓடு பாதையில் வெள்ள நீரானது சூழ்ந்துள்ளது. அதனால் விமானத்தை இயக்க முடியாமல் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.