சென்னை:சென்னை சர்வதேச ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையம் முதல் ஃபேஸ் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி திறந்து வைத்தார். மேலும் இந்த புதிய முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாசற்ற ஒரு நவீன முனையமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, தமிழ்நாட்டு கலாச்சாரம், புரதான நினைவுச் சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள் போன்றவைகளின் ஓவியங்களுடனும், கலைநயத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால் இனிமேல் 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுன்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுன்டர்கள், பயணிகள் உடமைகள் வரும் கண்வயர் பெல்ட்கள் 6, அதிநவீன லிப்ட்டுகள் 17, எஸ்கலெட்டர்கள் 17, வாக்கலேட்டர்கள் 6, பயணிகள் உடைமைகள் பரிசோதனை அதி நவீன கருவிகள் 3 அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய ஓடுபாதை விமானம் நிறுத்தும் இடம், டாக்ஸி வே போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டு, நவீனப் படுத்தப்பட்டுள்ளதால், விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு ஓடுபாதையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் முதல் சோதனை ஓட்டம் நேற்று முதல் தொடங்கியது.
நேற்று பகல் 12:55 வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 146 பயணிகளுடன் சென்னை வந்த யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம் முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கியது. புதிய முனையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து பயணிகள் உற்சாகத்துடன் வெளியே வந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏரோ பிரிட்ஜ் பாலம் வழியாக புதிய முனையத்தின் வருகை பகுதிக்கு வந்தனர்.
மேலும் விமான நிலைய உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலை நயத்துடன் கூடிய வண்ண ஓவியங்கள், பழமை வாய்ந்த கோயில் நினைவு சின்னங்கள் போன்றவைகளை பார்த்து ரசித்தனர். அதோடு புதிய விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அதி நவீன கன்வேயர் பெல்ட்டில் மிகக்குறுகிய நேரத்தில் வந்த தங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு பயணிகள் மகிழ்ச்சியாக வெளியேறினர்.