சென்னை விமான நிலையத்திற்குப் பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்க இலாகா அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து சுங்க இலாகா அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது திருவனந்தபுரத்திலிருந்து வந்த விமானத்தில் பயணம்செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முஜீப் தங்கல் (36) என்பவரைச் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனைசெய்தனர்.
அவரின் உடமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்ததை சுங்க இலாகா அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து 22 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 495 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.
அதேபோல் மலேசியாவிலிருந்து வந்த அந்நாட்டைச் சேர்ந்த அப்துல் சுபான் (33), முகமது சபீர் அலி (28) ஆகியோரைச் சோதனை செய்ததில் அவர்களின் பேன்ட், உள்ளாடைக்குள் ரகசிய அறைகள் வைத்து தங்கத்தை மறைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இரண்டு பேரிடமிருந்து 44 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 988 கிராம் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர். மொத்தமாக இவர்கள் மூன்று பேரிடமிருந்து 67 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 483 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு யாருக்காகக் கடத்திவந்தனர். இதன் பின்னணியில் இருப்பது யார் என்ற கோணங்களில் சுங்க இலாகா அலுவலர்கள் விசாரித்துவருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.67 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் இதையும் படிங்க:புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இனி ஏறுமே ஒழிய இறங்காது!