சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை நண்பர்களுடன் சுற்றி பார்க்க வந்த இரண்டு மாணவர்கள், நீரில் மூழ்கி பலியாகினர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் இருவரும் இறந்த சோகம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ் (வயது18), விருகம்பாக்கம், லோகையா காலனியை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது18), மாங்காட்டை சேர்ந்த ரிஸ்வான் (வயது 18), சாம் (வயது 18), ஆகிய நான்கு பேரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஏரியை சுற்றி பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது ரிஷிகேஷ் மற்றும் ஹரிஷ் செம்பரம்பாக்கம் ஏரியின் நான்காவது மதகின் கீழே இறங்கி நீரில் கால்களை நனைத்து கொண்டு இருந்ததாகவும் அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி, இருவரும் ஏரியில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:"அடுத்த ஆண்டு கள் சந்தைப்படுத்தப்படும்" கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவிப்பு!
நீரில் மூழ்கிய இருவரையும், அவரது நண்பர்கள் மீட்க முயற்சி செய்தும் முடியாததால், குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய இரு இளைஞர்களை தேடினர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில், ஹரிஷ் மற்றும் ரிஷிகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதல், ரிஷிகேஷிற்கு ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்து உள்ளது. மேலும், ஹரிஷ் கவுன்சிலிங் முடித்து விட்டு கல்லூரிக்காக காத்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இருவரும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பை தொடங்க இருந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து ஏரியை சுற்றி பார்க்க சென்று, ஏரியில் மூழ்கி இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நேரில் வந்து மருத்துவனையில் வைக்கப்பட்டு உள்ள இருவரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நாளை உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:டிக்கெட் பண்டலை தொலைத்த விவகாரம்: நடத்துநர் சம்பளத்தில் ரூ.36 ஆயிரம் பிடிக்கக்கோரிய உத்தரவு ரத்து!