அந்தக் கடிதத்தில், "ஆளுநர் மாளிகை முன்பு திமுக நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம், நாட்டின் வருங்காலத் தலைமுறையான மாணவர் சமுதாயத்திற்கு புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. ஆட்சியில் திமுக இல்லை. அதிகாரமும் நம் கையில் இல்லை. ஆனால், பொதுமக்களின் நலனுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக, என்றென்றும் உத்வேகத்துடன் பாடுபடுகிற இயக்கமாக இருக்கிறோம்.
மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்ற கொலைகார நீட் தேர்வு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைபாடு. அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் என்ன கதியானது என்பதைக்கூட வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்து, மாணவர்களின் உயிர் பறிப்புக்கு காரணமான செயலை செய்தது அதிமுக அரசு.
கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தின் மீது பாய்ச்சப்பட்ட கொடுவாளான நீட் தேர்வு ரத்து செய்யப்படாத நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவு என்பது முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, கார்ப்பரேட் கோச்சிங் சென்டர்களில் பயின்று, பலமுறை நீட் தேர்வு எழுதினால் மட்டுமே, மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, ராஜ்பவன் மேசையிலேயே தூசு படிந்து கிடக்கிறது. அதனை விரைந்து நிறைவேற்றி, அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதினேன். அவர், இந்தத் தீர்மானம் குறித்து சட்டரீதியான ஆலோசனைகளைப் பெற வேண்டி இருப்பதால், அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்துப் பதில் கடிதம் அனுப்பினார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் குழு, மருத்துவக் கல்லூரிகளில் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையைத் தமிழ்நாடு அரசு அப்படியே ஏற்றிருக்க வேண்டும். அப்படி ஏற்றிருந்தால், மொத்தமுள்ள அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் 404 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருக்கும்.
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 40 மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 2018-19ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 88 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 18 பேரும் சேர்ந்துள்ளனர். இதிலிருந்தே நீட் தேர்வு எந்தளவுக்கு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடியும்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்தால் போதாது. தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் சலுகை வழங்கும் வகையில் திருத்தம் செய்யுங்கள் என்று ஆணையிட்டு, அவசர சட்டத்தைத் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். அதை வெளியேகூடச் சொல்லாமல், ஆளுநரின் உத்தரவைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி, திருத்தம் செய்து, அவர் கேட்டவாறே எடப்பாடி அரசு அனுப்பி வைத்தது. அதன்பிறகாவது ஒப்புதல் கிடைத்ததா? அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் பன்வாரிலால் இசைவு தரவில்லை.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான விலையாக மத்திய அரசிடம் தனது உரிமைகளைப் பறிகொடுத்திருக்கும் இந்த ஆட்டம் அதிக காலம் நீடிக்கப்போவதில்லை. ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும். அப்போது நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்படுவதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மருத்துவக் கனவு கனிந்து நனவாகும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.