தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தில் 14 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு..!" - வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 3ஆம் தேதி வரை மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 4:37 PM IST

சென்னை:வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிலோ மீட்டர் உயரத்தில், இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் இருந்து தென்மேற்கு வங்காள விரிகுடா வரையிலான பகுதியில் நேற்று (அக். 27) ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையினால், கடல் மட்டம் 2.1 கிமீ உயரம் வரை குறைந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் நவம்பர் 3ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்புள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நாளை (அக். 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (அக். 28) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேப்போல் அக்டோபர் 30ஆம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது" என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்: சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் மழை பதிவு: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின் படி, அதிகபட்சமாக குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 4செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் முக்கடல் அணை (கன்னியாகுமரி), நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை (கடலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகர்) பகுதிகளில் தலா 3செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் அண்ணாநகர் மற்றும் மதுரவாயல் பகுதிகளிலும், சேலம் மாவட்டம் கரியகோவில் அணை மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது" இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details