சென்னை:மிக்ஜாம் புயலின் பாதிப்பால் கடந்த ஒரு வாரக் காலமாக சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அதன் பிறகு, டிசம்பர் 5ஆம் தேதி முதல் சென்னை நகரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த வரும் 5 தினங்களுக்குத் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று (டிச.15) காலை முதல் சென்னையில் பரவலாகச் சாரல் மழை பெய்தது. இதனால் சென்னை நகரமே கருமேகத்தால் சூழந்த்தால் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
மழைப் பதிவு: சென்னை மீனம்பாக்கத்தில் 10.4மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 9.3 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இதேபோல், காரைக்கால், திருத்தணி, நாகை, தூத்துக்குடி, நெல்லை போன்ற இடங்களிலும் மழையானது பதிவாகி உள்ளது. மேலும், சென்னையில் பதிவான வெப்ப நிலை என்பது 27.4டிகிரி செல்சீயஸ் ஆக இருந்தது.