சென்னை:இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,’மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை ஒட்டி, நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.
இந்நிலையில், இன்று (நவ.23) காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இன்று வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.