தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிசம்பர் முதல் வாரம் கன மழை பெய்ய வாய்ப்பு- ஸ்ரீகாந்த், கிரிஷ் தகவல் - டிசம்பர் முதல் வாரம்

நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை கன மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என கிரிஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கன மழை பெய்ய வாய்ப்பு
கன மழை பெய்ய வாய்ப்பு

By

Published : Nov 22, 2021, 9:55 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை கன மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். எனினும் சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் மாத வானிலையை தற்போது கணிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 65 விழுக்காடு அதிகமாக மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மைய தரவு கூறுகிறது.

அடுத்த இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் மற்றும் நவம்பர் 24 ஆம் தேதியிலிருந்து கன மழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அடுத்த இரண்டு வாரத்திற்கு தமிழ்நாடு கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் அதி கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறு இருப்பதாக கணித்துள்ளனர்.

கன மழை பெய்ய வாய்ப்பு

இது குறித்து வானிலை ஆய்வாளர் கே. ஸ்ரீகாந்த் கூறுகையில், "இன்றைய நிலவரப்படி வடகிழக்கு பருவமழையின் சராசரி 320.5 மிமீ பதிவாக வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் 529.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

எனவே வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. நவம்பர் மாத இறுதியில் தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம். அதன் மூலம் கடலோர மாவட்டங்களில் மிகக் கன மழை வரை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்தார்.

கன மழை பெய்ய வாய்ப்பு

இதேபோல மற்றொரு வானிலை ஆய்வாளர் கிரிஷ் கூறுகையில், "தற்போது வரை பெய்துள்ள மழை சாதாரண மழைப்பொழிவுதான். வரும் நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் முதல் வாரம் வரை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையிலும் மிகக் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகம்," எனக் கூறினார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நம்மிடம் தொலைப்பேசி வாயிலாக கூறுகையில், "தற்போது கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று பலமாக இல்லை. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பில்லை.

மேலும் வானிலையை பொறுத்தவரை அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு மட்டும் மாற்றத்தை கணிக்க முடியும். எனவே டிசம்பர் மாதத்தில் எப்படி மழை இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது," எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதே நோக்கம்- மனோ தங்கராஜ்

ABOUT THE AUTHOR

...view details