சென்னை:தமிழகத்தில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில், 9 மாவட்டகளுக்கும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 16, 17 ஆகிய இரு நாட்களிலும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை:தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை பெய்த மழையின் அளவு 386.5 மி.மீ அகும். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 404.4மி.மீ. இது இயல்பை விட 4 சதவீதம் குறைவு ஆகும். மேலும், சில மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை அளவு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தூத்துக்குடி, நிருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகி உள்ளது. இதில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 3 செ.மீ மழை பதிவானது. இதைத் தொடர்ந்து, சின்கோனா பகுதியில் 2 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், நீலகிரி மாவட்டம் பார்வூட், திருநெல்வேலி மாவட்டம் நாலூமூக்கு ஆகிய பகுதிகளில் தலா 1.செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அரபிக்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை:நாளை (டிச.14) முதல் டிசம்பர் 16 வரை மூன்று நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:மக்களவையில் புகைக்குண்டு வீச்சு..! குதித்தோடிய பார்வையாளர்களால் பரபரப்பு!