சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச.11) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை: கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது.
மழை அளவு: நீலகிரி, மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மி. மழையும், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. இதேபோல், திருநெல்வேலி, விருதுநகர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் மழைப் பதிவாகி உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள்: சென்னை மற்றும் அதன் புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்குச் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பருவமழை பொருத்த வரைக்கும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவான மழை அளவு என்பது 385 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 398.3மி.மீ ஆகும். இது இயல்பை விட 3 சதவீதம் குறைவாகும்.
அதேபோல் அரியலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இயல்பான அளவை விட மிகக் குறைவாகத் தான் மழைப் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: ஆந்திராவில் ஐயப்ப பக்தராக மாறுவேடத்தில் திரிந்த கொள்ளையன்..மடக்கிப் பிடித்த போலீசார்.. பின்னணி என்ன?