'ஆக்ஷன்' பட நஷ்ட ஈடு உத்திரவாதம்: விஷால் விளக்கம் அளிக்க உத்தரவு - விஷாலின் சக்ரா
சென்னை: 'ஆக்ஷன்' படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் 8.29 கோடி ரூபாய்க்கான உத்திரவாதத்தை எப்படி அளிக்க போகிறார்? என நடிகர் விஷால் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார்.
படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் எட்டு கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால், 'ஆக்ஷன்' படம் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.
தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த அதே கதையை நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் இயக்குநர் ஆனந்தன் படம் எடுத்துள்ளதால், அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடைவிதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.29 கோடி ரூபாய் பணத்துக்கான உத்திரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் எனவும், தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வுகாண வேண்டும் என்றும் அதுவரை 'சக்ரா' பட வியாபாரம் தொடர்பாக இறுதி முடிவெடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (அக்டோபர் 7) மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் வழக்குரைஞர் கிருஷ்ணா, ட்ரைடெண்ட் நிறுவன தரப்பில் விஜயன் சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதம் வைத்தனர்.
வாதங்களை கேட்ட நீதிபதி, ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 8.29 கோடி ரூபாய்கான உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்றும் எந்த வகையில் உத்திரவாதம் அளிக்க போகிறார் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை வரும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.